கோலாலம்பூர், ஜூன்-5 – ஜொகூர், மூவார் நாடாளுமன்றத் தொகுதிக்கு மத்திய அரசாங்கம் இவ்வாண்டு 27 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
மூவாரில் 60 திட்டங்களை மேற்கொள்ள கடந்த ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரையில் அத்தொகை அங்கீகரிக்கப்பட்டதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடிலா யூசோஃப் கூறினார்.
9 மசூதிகளின் மறுசீரமைப்பு, 18 Program Mesra உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக அந்த 27 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, மூவார் நாடாளுமன்றத்திற்கு எவ்வித நிதி ஒதுக்கீடும் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
மூவார் MP சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் கூறுவது போல் வாக்காளர்களுக்கு நெருக்குதல் அளிக்கும் நோக்கிலான அரசியல் பழிவாங்கலும் அல்ல என துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
நிதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடங்கி 8 மாதங்கள் ஆகியும், தனது தொகுதிக்கு இதுவரை எந்தவொரு ஒதுக்கீடும் வந்தபாடில்லை என சைட் சடிக் குற்றம் சாட்டியிருந்ததாக முன்னதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
அவற்றை மறுத்து பேசுகையில் துணைப் பிரதமர் அப்புள்ளி விவரங்களை வெளியிட்டார்.