
தோக்யோ, மே-8-ஜப்பானின் தெனோஜி உயிரியல் பூங்காவில் புலி ஒன்று மிகவும் மெலிந்த நிலையில் வாடுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது முற்றிலும் போலியானது என பூங்கா நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சமூக வலைத் தளங்களில் வைரலான அந்த வீடியோவில், புலி ஒன்று நடக்கக் கூட தெம்பில்லாமல் எலும்பும் தோலுமாக காட்சியளித்தது.
இதைக் கண்டு விலங்கு நல ஆர்வலர்கள் பூங்கா நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
சமூக ஊடகங்களிலும் இணையவாசிகள் கொந்தளித்தனர்.
இருப்பினும், அந்த வீடியோவை ஆய்வு செய்ததில், அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட deepfake வீடியோ என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தங்கள் பூங்காவில் உள்ள அனைத்துப் புலிகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், பராமரிப்பில் எந்தக் குறையும் இல்லை என்றும் நிர்வாகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற போலிச் செய்திகளைப் பரப்புவோர் மீது விழிப்புடன் இருக்குமாறு பொது மக்களை அது கேட்டுக்கொண்டுள்ளது.



