
கோலாலம்பூர், ஏப்-1-ம.இ.காவின் கல்வி கரங்களான MIED, AIMST பல்கலைக்கழகம்
மற்றும் டேஃப் கல்லூரி போன்றவற்றை தங்களது உயர்க்கல்விக்கு நாட்டிலுள்ள இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மருத்துவம் , உட்பட பல்வேறு நிபுணத்துவ கல்வி வாய்ப்புக்களையும் அதற்கு தேவையான கல்வி நிதி உதவியும் ஏற்பாடு செய்வதற்கு ம.இ.கா எப்போதும் தயாராய் இருக்கிறது.
கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ம.இ.காவின் உபகாரச் சம்பளம் மற்றும் கல்வி நிதி உதவியோடு உயர்க்கல்வித் துறையில் வெற்றிகரமாக பட்டப் படிப்பை முடித்துள்ளனர்.
எனவே இந்த வாய்ப்பை நமது மாணவர்கள் முழுமையகாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A . விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த அடைவு நிலையை பெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட அவர் , தங்களுக்கு பிடித்தமான துறையில் உயர்க்கல்வியை தொடர்வதற்கு திட்டமிட்டிருக்கும் , உன்னத லட்சியம் கொண்ட மாணவர்களுக்கு சரியான பாதையை காட்டுவதற்கு ம.இ.காவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ம.இ.கா என்றும் துணையாக இருந்து வந்துள்ளது.
அந்த வகையில் ம.இ.கா MIED மூலம் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு கல்வி உபகார சம்பளம் மற்றும் கல்வி கடனுதவி வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
இந்திய மாணவர்கள் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட B40 குடும்பங்களைக் சேர்ந்த மாணவர்கள் ம.இ.காவின் கல்விக் கரமான MIED மூலம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேஃப் கல்லூரி மற்றும் கூடிய விரைவில் திறக்கப்படவிருக்கும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஏய்ம்ஸ்ட் கல்லூரியிலும் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவம், பல் மருத்துவம், கணக்கியல் உட்பட பல்வேறு நிபுணத்துவ கல்வி மட்டுமின்றி கூடுதல் வருமானம் பெறுவதற்கு வாய்ப்பை வழங்கும் தொழில்துறை கல்வியை பெறுவதற்கும் ம.இ.கா உயர்க்கல்வி பிரிவுடன் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.



