பத்து பஹாட், டிசம்பர்-18, புதிதாகப் பிறந்த பெண் சிசுவொன்று அட்டைப் பெட்டியில் கைவிடப்பட்ட நிலையில், ஜோகூர், யொங் பெங்கில் உள்ள உணவங்காடி நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் தனது வியாபாரத்தைத் தொடங்குவதற்குத் தயாரான பெண்ணொருவர், அக்குழந்தையைக் கண்டெடுத்து போலீசுக்குத் தகவல் கொடுத்தார்.
தொப்புள் கொடியுடன் இருந்த அக்குழந்தை, துண்டு மற்றும் பாத்திக் துணியால் சுற்றப்பட்டிருந்தது.
அதனுடன் அடையாள விவரங்களோ அல்லது கடிதமோ எதுவும் கைப்பற்றப்படவில்லை.
நல்லவேளையாக குழந்தையின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை; என்ற போதிலும் பரிசோதனைக்காக பத்து பஹாட் சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்குக் குழந்தை அனுப்பப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் Shahrulanuar Mushaddat Abdullah தெரிவித்தார்.
குழந்தையை வீசியதற்காக குற்றவியல் சட்டத்தின் 317-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
தகவல் தெரிந்தோர் பத்து பஹாட் போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.