
அலோர்காஜா, மே 18-உல்லாசத் தளத்தில் நேற்று மாலை நடந்த ஒரு சம்பவத்தில், தண்ணீருடன் ஏற்பட்ட இரசாயன எதிர்வினையின் காரணமாக ஐந்து சிறிய வெடிப்புகள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
மாலை மணி 3.30 அளவில் நடந்த இந்தச் சம்பவத்தால், நீச்சல் குளத்தில் பணியாளர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, பம்ப் அறையில் இரசாயனக் கசிவும் ஏற்பட்டது.
அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து அலோர் காஜா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் மற்றும் அபாயகரமான இரசாயனங்களை கையாளும் சிறப்புக் குழுவுடன் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டதாக மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் தலைவர் சுல்கைரானி ரம்லி ( Zulkhairani Ramli ) தெரிவித்தார்.
பரிசோதனையின் முடிவில் , ஒரு மில்லியனுக்கு மூன்று பாகங்கள் அளவில் குளோரின் (Klorin) வாயு இருப்பது கண்டறியப்பட்டது.
அதோடு , சம்பந்தப்பட்ட இரசாயனம், நீரூற்றுக் குளங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் 90 விழுக்காடு டிரைகுளோரோ ஐசோசயனூரிக் (trichloroisocyanuric) தூள் வடிவம் கொண்டது எனக் கண்டறியப்பட்டது.
வேறு எந்த அபாயங்களையும் தவிர்ப்பதற்காக, இரசாயனங்கள் பாதுகாப்பான கொள்கலன்களுக்கு மாற்றப்பட்டன.
கட்டுப்பாட்டுப் பணிகள் முடிந்த பிறகு குளோரின் வாயுவின் அளவு பூஜ்ஜியம் ppm என்ற இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் சுல்கைரானி தெரிவித்தார்.



