
கோலாலம்பூர், மே-18–கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூரின் முக்கிய சுற்றுலா மற்றும் நெரிசல் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு போக்குவரத்து அமலாக்க நடவடிக்கையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமான DBKL மொத்தம் 211 சம்மன்கள் வழங்கி, 10 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது.
இந்த நடவடிக்கை ஜாலான் சுல்தான் (Jalan Sultan), ஜாலான் புடு (Jalan Pudu) மற்றும் புக்கிட் பிந்தாங் (Bukit Bintang) ஆகிய பகுதிகளில், போலீஸ் மற்றும் சாலை போக்குவரத்து துறையினரால் (JPJ) இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
சட்டவிரோதமாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் சுற்றுலா பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதால் அதிகாரிகள் கடுமையான சோதனையை நடத்தினர்.
DBKL, சாலை மறித்தல் மற்றும் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்திய குற்றங்களுக்காக 55 அபராத நோட்டீஸ்கள் வழங்கியதைத் தொடர்ந்து 10 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.
இதனுடன், போலீஸ் 21 சம்மன்களையும், சாலை போக்குவரத்து துறை 135 சம்மன்களையும் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக வழங்கியது.
இத்தகைய கூட்டு அமலாக்க நடவடிக்கைகள் நகரின் மற்ற நெரிசல் பகுதிகளிலும் தொடரும் எனவும் வாகனம் ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் DBKL தெரிவித்துள்ளது.



