ரவூப், ஜூலை 21- ரவூப் சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி,
1970ஆம் ஆண்டு மாணவர்களின் தொடர்பையும் வலுப்படுத்தி, அதற்கடுத்து 80, 90, 2000ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்களின் உறவையும் புதுப்பித்து, எல்லா நிலைகளிலும் பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கும் மிகப் பெரிய முன்னாள் மாணவர் சக்தியை உருவாக்கியிருக்கிறது.
பள்ளியின் பெருமை காத்து, பள்ளி வளர்ச்சிக்கு எல்லா நிலைகளிலும் துணை நிற்கும் முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் “அர்ப்பணிப்புக்கு ஓர் ஆராதனையும் முன்னாள் மாணவர்களின் சங்கமமும்” என்கிற நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.
ஆசிரியர் சரவணன் இராமச்சந்திரன் வரிகளில் உருவான “பிறந்த மண்ணின் பெருமை காத்து” எனும் பள்ளிப் பாடலும் இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான அரச மலேசிய போலீஸ் படையின் ஜொகூர் மாநில குற்றப்புலனாய்வு துறையைச் சேர்ந்த டி.எஸ்.பி. வே.இராஜகோபால் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று, பள்ளிப் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.
பள்ளியின் அபார வளர்ச்சி கண்டு பெருமிதம் அடைவதாகவும், சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியால்தான் நான் இன்று உயர்ந்துள்ளேன். ஆதலால், நான் எந்த மேடையிலும் சொல்வேன், தமிழ்ப்பள்ளிதான் நமது தேர்வு!” என்று தனது சிறப்புரையில் தெரிவித்தார்.
இதனிடயே, பெற்றோர் ஆசிரியர் சங்கம் உட்பட பள்ளி வாரியம், முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர்கள், சமுதாயத் தலைவர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் என பல நல்லுள்ளங்கள் இணைந்து தமிழ்த்தொண்டு ஆற்றிவருவதால் தற்போதைய சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாக தலைமையாசிரியர் கருணாநிதி நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், அதிகமான முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள்,
சிறப்புப் பிரமுகர்களாகக் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் சந்திரன், விஜியன், மஇகா ரவுப் தொகுதித் தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வன், பிகேஆர் கவுன்சிலர் டி.மகேந்திரன் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் சுற்றுவட்டாரத் தலைவர்களும் பள்ளிக்கு எல்லா வகையிலும் உறுதுணையாய் இருப்போம் என கூறியதாக பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.சண்முகநாதன் தெரிவித்தார்.