வாஷிங்டன், ஜூன் 21 – ரஷ்யாவை தளமாக கொண்டு செயல்படும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான காஸ்பர்ஸ்கின் (Kaspersky), பிரபல வைரஸ் தடுப்பு மென்பொருள்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் அந்த தடையை விதித்துள்ளதாக, அந்நாட்டு வர்த்தக துறை தெரிவித்துள்ளது.
அதனால், காஸ்பர்ஸ்கி இனி அமெரிக்காவில் அதன் மென்பொருளை விற்கவோ, ஏற்கனவே புழம்கத்தில் இருக்கும் மென்பொருள்களை புதுப்பிக்கவோ முடியாது என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசாங்கத்தின் சைபர் தாக்குதல்கள் மற்றும் காஸ்பர்ஸ்கின் செயல்பாடுகளில் ரஷ்யாவிற்கு இருக்கும் செல்வாக்கு அல்லது வழிநடத்தும் ஆதிக்கம் ஆகியவற்றின் காரணமாக, அது அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பது நீண்ட விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் முக்கிய தகவல்களை சேகரிக்க, காஸ்பர்ஸ்கி போன்ற ரஷ்ய நிறுவனங்களை மோஸ்கோ பயன்படுத்தி வருவது நிரூபிக்கப்பட்ட ஒன்றென, அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோ (Gina Raimondo) கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போதுள்ள சர்வதேச அரசியல் சூழல் மற்றும் நெருக்கடிகள் அடிப்படையில் அமெரிக்க வர்த்த துறை அந்த தடையை விதித்துள்ளது எனவும், அமெரிக்காவில் தங்களின் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் பாதுகாக்க வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமெனவும்,
காஸ்பர்ஸ்கின் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.