
ஷா ஆலாம், மே-19-DAP மக்கள் பிரதிநிதி ஒருவரும் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரும், நாட்டின் ‘ருக்குன் நெகாரா’ தேசியக் கோட்பாடுகளை இன்னும் ஆழமாகவும் சரியாகவும் புரிந்து கொள்ள வேண்டுமென, சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா கடும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
DAP-யைச் சேர்ந்த ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி மற்றும் சிலாங்கூர் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினர் ரோனி லியூ ஆகியோரைக் குறிவைத்து இந்த அறிவுரை விடுக்கப்படுவதாக, சிலாங்கூர் அரண்மனை அலுவலகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
‘ருக்குன் நெகாரா’ மலேசியர்களிடையே ஒற்றுமையின் அடித்தளமாக விளங்குகிறது என்று குறிப்பிட்ட சுல்தான் ஷராஃபுடின், மாநிலத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மாதத்திற்கு இரண்டு முறை ‘டத்தாரான் சிலாங்கூர்’ வளாகத்திற்கு வருகை தந்து, அங்குள்ள நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளை வாசித்து, அதன் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிலாங்கூர் மாநிலக் கொடிக் கம்பத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள ‘ருக்குன் நெகாரா’ நினைவுச் சின்னத்தைப் பார்வையிடுவதற்காகச் சுல்தான் ஷராஃபுடின் இன்று ஷா ஆலமில் உள்ள ‘டத்தாரான் சிலாங்கூர்’ வளாகத்திற்கு வருகை தந்த புகைப்படமும் அந்த ஃபேஸ்புக் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளாக விளங்குபவர்கள் சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது தேசியக் கோட்பாடுகளுக்கு முரணான வகையிலோ தங்களின் கருத்துகளையோ அல்லது செயல்பாடுகளையோ அமைத்துக் கொள்ளக் கூடாது என்று சுல்தான் சுட்டிக்காட்டினார்.
மாநிலத்தின் அமைதியையும், சமய மற்றும் இன நல்லிணக்கத்தையும் பேணுவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், நாட்டின் அடிப்படையான தேசியக் கோட்பாடுகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதே சிறந்த மக்கள் சேவைக்கு வழிவகுக்கும் என்றும் சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.
சிலாங்கூரில் பன்றிப் பண்ணைகளை முடிவுக்குக் கொண்டு வரும் சுல்தான் ஷராஃபுடினின் உத்தரவு குறித்து, வோங் சியூ கி, ரோனி லியூ இருவரும் முன்னதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



