
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – மூன்று வயது சிறுமியை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்து, பின்னர் அதன் உடலை லங்காவி கூனோங் ராயாவிலுள்ள காட்டில் வீசிய வேலையில்லாத நபருக்கு அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
2019 ஆம் ஆண்டு லங்காவி மருத்துவமனை குடியிருப்பில் நூர் ஐஸ்யா அலேயா அப்துல்லாவை ( Nur Aisyah Aleya Abdullah ) கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 43 வயதான ரம்லான் அப்துல் ரஷித் ( Ramlan Abdul Rashid ) என்பவருக்கு நீதிபதி எவானி பரிசிட்டா முகமட் ( Evawani Farisyta Mohammad ) இந்த தண்டனையை விதித்தார்.
மண்டை ஓடு மற்றும் இரண்டு பற்கள் மட்டுமே மீட்கப்பட்டதால், அந்த சிறுமியின் மரணத்திற்கான காரணத்தை தடயவியல் நிபுணரால் கண்டறிய முடியவில்லை என்றாலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சூழ்நிலை ஆதாரங்கள் மிக வலுவாக இருப்பதோடு , குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமென்றே மற்றும் ஆபத்தான செயல்களை புரிந்திருப்பது தெளிவாக காட்டியிருப்பதையும் நீதிபதி தெரிவித்தார்.
நூர் ஐஸ்யாவை ஒரு தாதியான அவரது தாயார் குற்றம் சாட்டப்பட்டவரின் பராமரிப்பில் விட்டுச்சென்றதோடு அவர் அவர் இரண்டு மாதங்களாக வேலைக்காக பயணம் செய்து வந்துள்ளார். 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டிற்கு சென்று பார்த்போது அங்கு தனது மகள் காணவில்லை என்பதை உணர்ந்து தனது கணவருக்கு எதிராக அதன் தாயார் போலீசில் புகார் செய்தார் .