கோலாலம்பூர், ஏப்ரல்-5, கோலாலம்பூரில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததன் பேரில் MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைதுச் செய்யப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி, வேறு துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவரான அந்நபர், MACC-யின் உத்தரவாதத்தின் பேரில் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டு, வேலைக்குத் திரும்பிய நிலையில், விசாரணைகள் முடியும் வரை வேறு துறைக்கு மாற்றப்பப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி இசா அதனை உறுதிப்படுத்தினார்.
MACC-யின் விசாரணை அறிக்கைக்காக தமது தரப்புக் காத்திருக்கும் என அவர் சொன்னார்.
MACC-யின் விசாரணை முடிவை பொறுத்து, அந்தப் போலீஸ்காரர் மீது தங்கள் தரப்பில் என்ன நடவடிக்கை எடுப்பதென்பது முடிவாகும் என ருஸ்டி மேலும் கூறினார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு,
அந்த மூத்த போலீஸ் அதிகாரி அவர்களைப் பாதுகாத்து வந்திருப்பது அண்மையில் அம்பலமானது.
அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 20 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட ரொக்கப்பணத்தையும் MACC கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.