லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 10 – அமெரிக்காவை சேர்ந்த யூடியூப் பிரபலம் ஒருவர், இரு பெண்கள் ஹெலிகாப்டரில் இருந்து, சொகுசு லம்போர்கினி (Lamborghini) காரை நோக்கி பாட்டாசுகளை கொளுத்தி விடும் வீடியோவை, சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததற்காக, நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கியுள்ளார்.
சுக் மின் சோய் (Suk Min Choi) அல்லது அலெக்ஸ் சோய் (Alex Choi) எனும் அந்த யூடியூபருக்கு எதிராக, அனுமதி இன்றி ஹெலிகாப்டரில் வெடிமருந்தை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூலை நான்காம் தேதி, “பட்டாசுகளை கொண்டு லம்போர்கினியை அழிப்போம்” எனும் தலைப்பில், அலெக்ஸ் அந்த 11 நிமிட வீடியோவை பதிவேற்றம் செய்த வேளை ; கடந்த வாரம் அவருக்கு எதிராக மத்திய கலிப்போர்னியா நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
வெடிமருந்தை ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லவும், அந்த வீடியோவை பதிவுச் செய்யவும் அலெக்ஸ் அனுமதி பெறவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், அது குறித்து கருத்துரைக்க, பத்து லட்சம் பேர் பின் தொடரும் யூடியூப் பிரபலமான அலெக்ஸை தொடர்புக் கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை, 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது சுமார் இரண்டு லட்சத்து 35 ஆயிரத்து 813 ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் அலெக்ஸ் விடுவிக்கப்பட்ட வேளை ; அவ்வழக்கு விசாரணை ஜூலை இரண்டாம் தேதி செவிமடுக்கப்படும்.