கோலாலம்பூர், ஏப்ரல் 26 – பேராக், லுமுட்டில், அண்மையில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து இழிவான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படும் X சமூக ஊடக கணக்கு பயனர் ஒருவருக்கு எதிராக போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சிறு குற்றச்செயல் சட்டம், குற்றவியல் சட்டம் மற்றும் தொடர்பு பல்லூடக சட்டங்களின் கீழ் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஜைன் தெரிவித்தார்.
அந்த கூற்றை பதிவிட பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கைபேசி ஒன்றும், அந்நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை முழுமை பெற்று, தேசிய சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள வேளை ; மேல் நடவடிக்கைக்காக காத்திருப்பதாகவும் ஷுஹைலி சொன்னார்.
சம்பந்தப்பட்ட நபர் வெளியிட்ட கூற்று தொடர்பில், கடந்த செவ்வாய்கிழமை, கெரியான் மாவட்டத்தில் போலீஸ் புகார் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அச்சம்பவம் தொடர்பில் ஊகங்களை வெளியிட வேண்டாம் எனவும் ஷுஹைலி பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.