லூமூட், டிசம்பர்-14, பேராக், லூமூட்டில் உள்ள பந்தாய் பாத்தேக் கடல் பகுதியில் தெம்பாகா (tembaga) வகை உப்புநீர் முதலை காணப்பட்டிருப்பதை அடுத்து, கடலில் குளிப்பது உள்ளிட்ட எந்தவொரு நீர் சார் நடவடிக்கையிலும் ஈடுபட பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்களை எச்சரிக்கும் விதமாக கடற்கரையில் சிவப்புக் கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
கடற்கரையில் கண்காணிப்பு முடிந்து அப்பகுதி வருகையாளர்களுக்குப் பாதுகாப்பானதே என உறுதிப்படுத்தப்படும் வரை அத்தடைத் தொடருமென, மஞ்சோங் நகராண்மைக் கழகமான MPM கூறியது.
எனினும், டத்தாரான் தெலோக் பாத்திக் மற்றும் அதன் பூங்காவில் வழக்கமான நடவடிக்கைகள் தொடரலாம்; அவற்றுக்குத் தடையில்லை.
இதையடுத்து, MPM, பொதுத் தற்காப்புப் படையான APM, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
அதோடு, முதலையைப் பிடிக்க பொறிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
தெலோக் பாத்திக் கடற்கரையிலிருந்து 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு நிறுவனத்துக்குச் சொந்தமான முனையத்தில் வியாழக்கிழமை பிற்பகல் வாக்கில் அம்முதலை காணப்பட்ட வீடியோ முன்னதாக APM-மின் கவனத்துக்குச் சென்றது.