
டக்கா, ஜூலை.13- வங்காளதேத்தின் தென்கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் தொடர் பருவமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 50தை எட்டியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் வெள்ளத்தைத் தவிர்த்து நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
மோசமான வெள்ளத்தால் சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் படகுகள் மூலம் உணவு, குடிநீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுச் செல்கின்றனர். உணவு மற்றும் பாதுகாப்பான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்காக சுமார் 4,000 தற்காலிக இடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம், Cox’s Bazarரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15 பேர் உயிரிழந்தனர். 12 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள், மரங்கள் அகற்றப்பட்ட மலைச்சரிவுகளில் நெரிசலான தங்குமிடங்களில் வசித்து வருகின்றனர். பருவமழையால் நிலம் உறுதியற்றதாக இருப்பதால் அப்பகுதிகளிலும் ஆபத்தான சூழ்நிலை காணப்படுகிறது. பருவ மழை தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், வெள்ளப் பெருக்கு மோசமடைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.



