கோலாலம்பூர், ஆகஸ்ட்-15 – பல்கலைக்கழக மாணவர்கள், சில நூறு ரிங்கிட்டுகளுக்காக தங்களின் வங்கிக் கணக்குகளையும், ATM அட்டைகளையும் மோசடி கும்பல்களிடம் விற்கும் செயல் கவலையளிக்கிறது.
புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் ( CCID) இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி மொஹமட் யூசோஃப் (Datuk Seri Ramli Mohamed Yoosuf) அவ்வாறு கூறியுள்ளார்.
CCID-யின் தரவுகளின் படி இதுவரை மோசடி கும்பல்களியம் வங்கிக் கணக்குகளை விற்றதாகக் கண்டறியப்பட்ட 208,000 பேரில் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவர் என்றார் அவர்.
சில மாணவர்கள் தெரியாமல் மோசடிக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் மேலும் சிலர் தாங்களாகவே முன்வந்து வங்கிக் கணக்கை ‘விற்று’ விடுகின்றனர்.
சமூக ஊடகங்களில் ஏற்படும் அறிமுகங்கள் வாயிலாக மாணவர்கள் அதில் ஈர்க்கப்பட்டு விடுவதாக டத்தோ ஸ்ரீ ரம்லி சொன்னார்.
500 ரிங்கிட்டிலிருந்து 1000 ரிங்கிட் வரை கூட சில நேரங்களில் offer-கள் வருவதால், மாணவர்கள் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் வங்கிக் கணக்குகளை விற்று விடுகின்றனர்.
போலீசிடம் பிடிபட்டால் என்னவாகும் என்பதை அவர்கள் புரியாமலிருக்கின்றனர்; சட்ட நடவடிக்கைப் பாய்ந்தால் பின்னாளில் வேலைத் தேடுவது கூட சிக்கலாகி விடுமென்பதை அவர்களுக்கு தாம் எச்சரிக்க விரும்புவதாக ரம்லி கூறினார்.