நிபோங் தெபாங், ஜூன் 18 – சுங்கை பக்காப்பிற்கு (Sungai Bakap) அருகே வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 155.9 ஆவது கிலோமீட்டரில் விரைவு பஸ்ஸில் கார் ஒன்று மோதியதைத் தொடர்ந்து கார் ஓட்டுனர் மரணம் அடைந்ததோடு அக்காரில் இருந்த பயணி காயம் அடைந்தார்.
இன்று விடியற்காலை மணி 4.36 அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் தெரிவித்தார். புரோட்டோன் Gen 2 கார் விரைவு பஸ்ஸில் மோதிய சம்பவத்தில் காரில் இருந்த இருந்த இரு ஆடவர்களும் அக்காரில் சிக்கிக் கொண்டதால் அவர்கள் பின்னர் வெளியேற்றப்பட்டனர்.
விபத்து நிகழ்ந்த இடத்திலேயே 30 வயது கார் ஓட்டுனர் மரணம் அடைந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
முகத்தில் காயம் அடைந்த 40 வயது ஆடவர் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே இந்த விபத்து குறித்த புகாரை பெற்றதாகவும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.