கோலாலம்பூர், நவம்பர்-30, தேசிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காத வணிக அடையாள பெயர்ப் பலகைகளுக்கு எதிரான DBKL-லின் அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்பில், சர்ச்சைகளைத் தூண்டுவதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாஃபா (Dr Zaliha Mustafa) அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
DBKL தனது கடமையைத் தான் செய்கிறது; யாருடைய நெருக்குதலாலோ அல்லது உள்நோக்கத்தோடோ எந்தவொரு தரப்பையும் அது குறி வைத்து செயல்படவில்லை என அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
மாநகரின் விளம்பர விதிமுறைகளின்படி அனைத்து விளம்பரங்களும் முதன்மையாக மலாய் மொழியில் இருக்க வேண்டும்; மற்ற மொழிகள் சிறிய அளவுகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என சாலிஹா கூறினார்.
எனவே முழுக்க முழுக்க அமுலாக்கம் சம்பந்தப்பட்ட அவ்விஷயத்தை இன விவகாரமாக்கி பிரிவினைவாதத்தைத் தூண்ட வேண்டாமென அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பையும் அவர் கேட்டுக் கொண்டார்.
விதிமுறையைப் பின்பற்றாததால் இவ்வாண்டு இதுவரையில் மட்டும் 264 நோட்டீஸுகள் வெளியிடப்பட்டு, 36 வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வணிக உரிமையாளர்கள் மீது எடுத்த எடுப்பிலேயே நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை; விளம்பரப் பெயர்ப் பலகைகளை மாற்றுவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
கோலாலம்பூரில் சீன வணிக வளாகங்களில் தேசிய மொழியை விட சீன மொழிக்கு அதிக முக்கியத்துவம் தரும் வணிக அடையாளங்கள் குறித்து நவம்பர் 18-ல் முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த சுற்றுலா அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங், DBKL-லையும் சாடியிருந்தார்.
அமுலாக்க நடவடிக்கை என்ற பெயரில் நாட்டின் பன்முகத்தன்மையை DBKL கெடுக்கக்க் கூடாது என அவர் அறிக்கை விட சர்ச்சை பெரிதானது.