கோலாலம்பூர், மே-17 – UiTM எனப்படும் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயில வரி கட்டாத வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்புண்டு, ஆனால் வரி செலுத்தும் பூமிபுத்ரா அல்லாத மலேசியர்களுக்கு இடமில்லையா என பேராசிரியரும் கல்விமானுமான டாக்டர் பி.ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்படியானால் UiTM-யை நிர்வகிக்க எங்கிருந்து நிதி வருகிறது என உரிமைக் கட்சியின் தலைவருமான அவர் காட்டமாகக் கேட்டுள்ளார்.
பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு UiTM-மில் இருதய அறுவை சிகிச்சையில் முதுகலைப் பயிற்சிப் பெற வாய்ப்பு மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.
இன அடிப்படையிலான பழங்காலத்து சிந்தனை இன்னமும் கடைபிடிக்கப்படுவது வருத்தமும் வேதனையும் அளிப்பதாக டாக்டர் ராமசாமி கூறினார்.
நாட்டில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையானப் பற்றாக்குறைப் பிரச்னைக்குத் ஒரு தீர்வாகத்தான், மலேசிய மருத்துவச் மன்றம், MMC-வால் அப்பரிந்துரை முன் வைக்கப்பட்டது; ஒரேடியாக UiTM-மை மற்ற இன மாணவர்களுக்குத் திறந்து விடுமாறு யாரும் இங்குக் கோரவில்லை.
ஆக, அப்பரிந்துரை முன்வைக்கப்பட்டதன் அவசியமும் நோக்கமும், இன அடிப்படையில் ஊறிய சிந்தனையில் அடிபட்டு போயிருப்பது பெரும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
மலேசியர்களின் வரிப் பணத்தில் செயல்படும் UiTM-மால் இந்த முக்கியத்துவத்தைக் கூட உணர முடியாவிட்டால், இந்நாட்டில் சீர்திருத்தம் முன்னோக்கிச் செல்லும் என்பதை எப்படி நம்ப முடியும் என ராமசாமி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், UiTM-மின் அறுவை சிகிச்சை முதுகலைப் பட்டப்படிப்பை புமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்குத் திறப்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என உயர் கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abd Kadir தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.