ஹைக்கோவ், நவம்பர்-9,சீனா, ஹைக்கோவ் நகரில் அண்மையில் நடைபெற்ற WCGC எனப்படும் உலக வர்த்தக கோல்ஃப் போட்டியின் இறுதிச் சுற்றில், Leonin Malaysia 1 அணி மூன்றாமிடத்தை வெற்றிக் கொண்டது.
அவ்வணி சார்பில் களமிறங்கிய அனுஷ்கா கயன் விஜேரத்னே மற்றும் லீ ரோபர்ட் இருவரும் 87 புள்ளிகளைக் குவித்து மூன்றாவதாக வந்தனர்.
93 புள்ளிகளுடன் ஜப்பான் முதலிடத்தையும் 90 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாமிடத்தையும் பிடித்தன.
வர்த்தக உலகின் கோல்ஃப் போட்டியில் மலேசியாவுக்கும், Leonian Malaysia அணியின் நற்பெயருக்கும் இதன் வழி இருவரும் பெருமைத் தேடித் தந்தனர்.
30 நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்ற போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறித்து அனுஷ்கா பெருமிதம் தெரிவித்தார்.
அடுத்தாண்டு மேலும் சிறப்பான அடைவுநிலையைப் பதிவுச் செய்வோம் என்றார் அவர்.
இவ்வேளையில் Team Leonian Malaysia 2 அணியைச் சேர்ந்த Kong Tuck Keat – Ang Khai Phang இருவரும் 68 புள்ளிகளுடன் 21-வது இடத்தைப் பிடித்தனர்.
அந்நால்வருக்கும், WCGC போட்டியின் மலேசிய உரிமத்தை வைத்துள்ள Elora Global Sdn. Bhd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷோபன் ராம்லு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
உலகத் தரத்திலான அப்போட்டியில் பங்கேற்க மேலும் அதிகமான உள்ளூர் வர்த்தக நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, அடுத்தாண்டு சில தகுதிச் சுற்றுகளை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.