
சென்னை, ஜூலை-31- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள வீட்டுக்கு வெளியே வழுக்கி விழுந்ததாகக் கூறி, நேற்று முதல் CCTV வீடியோ தீயாய் பரவி வருகிறது.
ரஜினிகாந்த் போல் உருவத்தைக் கொண்டவர், காலை செய்தித் தாளை எடுப்பதற்காக வேலி பக்கம் சென்று திரும்பும் போது வழுக்கி விழுந்து விடுவது வீடியோவில் தெரிகிறது.
விழுந்தவர், உடனடியாக சுதாகரித்து எழுந்து வீட்டுக்குள் நடந்துச் செல்கிறார்.
வீடியோவைப் பார்த்த ரஜினி இரசிகர்கள், 75 வயது அந்த மூத்த நடிகரின் நிலை குறித்து கவலைத் தெரிவித்தனர்.
“தலைவா, உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என ஏராளமானோர் அக்கறையில் வீடியோவின் கீழ் பதிவிட்டனர்.
எனினும், வீடியோவில் இருப்பவர் ரஜினிகாந்த் அல்ல என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
‘கூலி’ பட வெளியீட்டுக்காகக் காத்திருக்கும் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறின.
வீடியோவில் இருப்பவரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை; எனினும், அவர் அணிந்திருந்த சட்டை பனியனும், அரைக்கால் சட்டையும் பார்ப்பதற்கு சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் தனது வீட்டருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அணிந்திருந்த உடையுடன் ஒத்திருந்தது.
இதுவே, வீடியோவில் இருப்பவர் ரஜினிகாந்த் தான் என இரசிகர்கள் குழப்பமடைக் காரணம் எனக் கூறப்படுகிறது.
‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இந்த 75 வயதிலிலும் ‘ஜெயிலர் 2’, ‘கூலி’ என அடுத்தடுத்து சுறுசுறுப்பாக படங்களில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.