
புத்தாஜெயா, மார்ச் 13 – நாளை வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாளை மீண்டும் வாக்குமூலம் வழங்க வருவது உறுதி என கூறியுள்ளார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி.
நாளை காலை 9 மணிக்கு அவர் அழைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, பெரா (Bera) நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று காலை 9.46 மணியளவில் MACC தலைமையகம் வந்து பின்னர் 3.13 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
பின்னர், அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், விசாரணை முடியும் வரை அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பேன் எனவும் தெரிவித்தார்.
170 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அவரின் உதவியாளர்கள் வீட்டில் சிக்கியதைத் தொடர்ந்து கள்ளப் பண பரிவர்த்தனை விசாரணையில் இஸ்மாயில் சப்ரியும் ஒரு சந்தேக நபர் என MACC ஆணையர் அசாம் பாக்கி கூறியிருந்தார்.
அந்த ரொக்கத் தொகை பாக்த் (baht), ரியால் (riyal), பவுண்டு ஸ்டெர்லிங் (pound sterling), வொன் (won), யூரோ (euro), ஸ்விஸ் ஃப்ராங்க் (Swiss franc), யுவான் (yuan) போன்ற பல்வேறு நாணயங்களில் இருந்தது. அதோடு, சுமார் RM7 மில்லியன் மதிப்புள்ள 16 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, அவற்றில் மொத்தம் RM2 மில்லியனுக்கும் கூடுதலான தொகை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை, இஸ்மாயில் சப்ரியின் பதவிக் காலத்தில் விளம்பர மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்கான நிதி மூலம் மற்றும் செலவுகள் தொடர்பாக நடைபெறுகிறது.