
கோலாலம்பூர், ஜூலை-5 – இந்தியா செல்லும் மலேசியர்கள் கடந்த ஜூலை 1 முதல் பழையபடி விசா கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவுக்கு 30 நாட்கள் வரை விசா இல்லாமல் செல்லும் ஓராண்டு சலுகைக் காலம் முடிந்துள்ளதே அதற்குக் காரணம்.
2024 ஜூலை 1 முதல் இவ்வாண்டு ஜூன் 30 வரை, அந்த 30 நாட்கள் இரட்டை நுழைவுக்கான இலவச மின்னணு சுற்றுலா விசா வழங்கப்பட்டு வந்தது.
இந்த சலுகையானது, மலேசியர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா, வணிகம் அல்லது மருத்துவ காரணங்களுக்காக பயணம் செய்ய உதவியது; மேலும், இந்த விசா மூலம், மலேசியர்கள் இரண்டு முறை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.
இந்நிலையில், இந்த ஜூலையிலிருந்து மறுசீரமைக்கப்பட்ட விசா கட்டண விகிதங்களை இந்தியத் தூதரகத்தின் இணைய அகப்பக்கம் வெளியிட்டுள்ளது.
அவ்வகையில், ஓராண்டு வரையிலான சுற்றுலா விசாவுக்கு 472 ரிங்கிட் கட்டணமும், ஓராண்டுகளுக்கும் மேல் ஆனால் 5 ஆண்டுகள் வரை 944 ரிங்கிட் கட்டணமும் விதிக்கப்படும்.
இதுவே ஓராண்டுக்குட்பட்ட வணிகப் பயணமென்றால், 567 ரிங்கிட் செலுத்த வேண்டும்.
ஓராண்டுக்கும் மேல் 5 ஆண்டுகளுக்கும் கீழ் என்றால் 1,180 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும்.
6 மாதங்கள் வரையிலான நுழைவு விசாவுக்கு 378 ரிங்கிட்டும், 6 மாதங்களுக்கு மேல் ஓராண்டுக்கு கீழ் 567 ரிங்கிட்டும் கட்டணமாக விதிக்கப்படுகிறது.
ஓராண்டுக்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்குக் கீழ் என்றால் 944 ரிங்கிட் செலுத்த வேண்டும்.
வேலைக்கான விசாவுக்கு, 6 மாதங்களுக்கு 567 ரிங்கிட்டும், 6 மாதங்களுக்கு மேல் ஓராண்டுக்குக் கீழ் 944 ரிங்கிட்டும், ஓராண்டுக்கும் மேல் 5 ஆண்டுகளுக்கும் கீழ் 1,416 ரிங்கிட்டும் விதிக்கப்படுகிறது.
5 ஆண்டுகள் வரையிலான மாணவர் விசாவுக்கும் மருத்துவ விசாவுக்கும் 378 ரிங்கிட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.