வாஷிங்டன், நவம்பர்-10, அனைத்துலக விண்வெளி மையத்தில் சிக்கியிருக்கும் இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், திடீர் உடல் எடைக் குறைப்புக்கு ஆளாகியுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள புதியப் புகைப்படத்தில், சுனிதா எலும்பும் தோலுமாகக் காட்சியளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சுனிதாவின் உடல்நிலையில் தாங்களும் அக்கறைக் கொண்டிருப்பதாக நாசா கூறியது.
இப்புதியப் புகைப்படம் வெளிவருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சுனிதாவின் உடல் மெலிந்து வருகிறது.
என்றாலும், நாசா மருத்துவர்கள் அவரை அணுக்கமாகக் கண்காணித்து உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருப்பதால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக உடல் எடை குறைவது நடக்கக்கூடியது தான்; அதில் பயப்பட ஒன்றுமில்லையென நாசா செய்தி தொடர்பாளர் கூறினார்.
5 மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் தங்கியுள்ள சுனிதா, அங்கிருந்த படியே அண்மையில் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
அப்போது நன்றாக இருந்தவர் திடீரென மிகவும் மெலிந்து காணப்படுவது ஏன்? அவருக்கு நோய் தொற்று பாதிப்பா என வலைத்தளவாசிகள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுனிதாவும், சக அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் (Butch Wilmore) அடுத்தாண்டு பிப்ரவரியின் Space X விண்கலம் மூலம் பூமி திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளது.