விமான அழுத்தக் கோளாறு: புருணைக்கு பயணமான ஏர் ஏசியா விமானம் கோத்தா கினாபாலுவுக்கு திருப்பி விடப்பட்டது

கோலாலம்பூர், டிசம்பர்-29,
கோலாலம்பூரிலிருந்து புருணை பயணமான ஏர் ஏசியா விமானம் ஒன்று, விமானத்தின் உள் அழுத்தத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சபா, கோத்தா கினாபாலு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
சனிக்கிழமை, இந்த விமானம் பயணத்தின் நடுவே ‘அறை அழுத்தம்’ தொடர்பான எச்சரிக்கையை பெற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக அது திசைமாற்றம் செய்யப்பட்டதாக ஏர் ஏசியா விளக்கியது.
விமானம் கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
அனைத்து பயணிகளும் விமானப் பணியாளர்களும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பயணிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டதுடன், புருணைக்கு செல்ல மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் ஏர் ஏசியா கூறியது.
இந்த சம்பவத்தில் அவசர நிலை எதுவும் இல்லை என்றும், விமான பாதுகாப்பே நிறுவனத்தின் முதன்மை என்றும் ஏர் ஆசியா அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.



