நியூ யோர்க், ஆகஸ்ட்-2 – பாலஸ்தீன ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) ஈரான் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் புதைக்கப்பட்ட வெடிகுண்டாலேயே கொல்லப்பட்டார்.
மேல்தட்டு மக்கள் குடியிருக்கும் பகுதியில் அமைந்துள்ள அந்த விருந்தினர் மாளிகையில் 2 மாதங்களுக்கு முன்னரே அந்த வெடிகுண்டு புதைக்கப்பட்டதாக, ஈரானில் உள்ள இருவர் உட்பட மேற்காசியாவில் 7 அதிகாரிகளை மேற்கோள் காட்டி New York Times (NYT) செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் சரியாக எப்போது, எப்படி வெடிகுண்டு விருந்தினர் மாளிகைக்கு கொண்டுச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டதென்பதை அவர்களால் கண்டறிய முடியவில்லை.
புதன்கிழமையன்று குண்டு வெடித்த போது கட்டடம் குலுங்கி, கண்ணாடிகளும் சுவரும் உடைந்து சிதறின.
ஹனியேவும் அவரின் மெய்க்காவலரும் தங்கியிருந்த அறையில் அந்த குண்டு வெடித்துச் சிதறியது.
சேதமுற்ற மாளிகையின் புகைப்படத்தையும் NYT பகிர்ந்துள்ளது.
இப்புதியத் தகவலானது, ஆகாய மார்க்கமாகத்தான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஹனியேவைக் கொன்றதாக வெளியான தகவல்களை மறுக்கும் வகையில் உள்ளது.
ஹனியேவின் மரணத்துக்கு இஸ்ரேல் இதுவரை வெளிப்படையாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், உலக நாடுகள் குறிப்பாக முஸ்லீம் உலக நாடுகள் அந்த யூத நாட்டையே குற்றம் சாட்டியுள்ளன.