கோத்தா பாரு, நவம்பர்-6 – தாய்லாந்தில் ‘பைத்தியமாக்கும் மாத்திரை’ என்ற பட்டப்பெயரைக் கொண்ட யாபா போதை மாத்திரை, தற்போது கிளந்தானிலும் போதைப் பித்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
மலிவான விலையோடு எளிதாகவும் கிடைப்பதால், மாணவர்கள் மத்தியிலும் இந்த யாபா மாத்திரைப் பயன்பாடு பிரபலமடைந்துள்ளதாக, கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ மொஹமட் யூசோஃப் மாமாட் (Datuk Mohd Yusoff Mamat) தெரிவித்தார்.
கிளந்தானில் 1 யாபா மாத்திரை 10 ரிங்கிட்டுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது; அதே மற்ற கிழக்குக் கரை மாநிலங்களான பஹாங்கிலும் திரங்கானுவிலும் அதன் விலை 15 ரிங்கிட்டாக உள்ளது.
எனவே தான், கிளந்தானில், கஞ்சா, ஹெரோயின், methamphetamine போன்ற போதைப் பொருட்களை விட இந்த யாபா மாத்திரைகளுக்கு மவுசு அதிகமென்றார் அவர்.
விலை 10 ரிங்கிட்டுக்கும் குறைவாக இருப்பதால், கிளந்தான் பள்ளி மாணவர்களுக்கு அது மிகவும் வசதியாகப் போய் விட்டது.
ஒட்டுமொத்தமாகவே பார்த்தால் கிளந்தானில் போதைப் பொருள் பிரச்னை மோசமான நிலையிலிருப்பதாக யூசோஃப் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் மட்டுமே 49.17 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான யாபா மற்றும் ஹெரோயின் வகைப் போதைப் பொருட்கள் அங்கு பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப் பொருள் பிரச்னை கிளந்தானில் பெரும் சமூகச் சீர்கேடாக உருவாகி வருவதாகவும் அவர் சொன்னார்.