கோலாலம்பூர், மே 21 – வீட்டின் ஒரு சிறிய பகுதியில், ஒருவர் மட்டுமே படுக்க வசதியான கட்டிலை போட்டு, அதனை நூற்று 70 ரிங்கிட்டுக்கு வாடகைக்கு விட முயலும், உரிமையாளர் ஒருவரின் செயலால் இணைய பயனர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவரது அந்த செயல் இணையவாசிகள் இடையே விவாதத்தையும் தூண்டியுள்ளது.
வீட்டின் ஒரு சிறிய பகுதியில், ஒருவர் மட்டுமே படுத்துறங்க ஏதுவாக கட்டில் போடப்பட்டிருக்கும் புகைப்படத்தை, இம்மாதம் 16-ஆம் தேதி, மாட் டான் என்பவர் தனது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.
அதோடு, சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கும் அவருக்கும் இடையில் நடைபெற்ற “வாட்ஸ்அப்” உரையாடலின் “ஸ்கிரீ ஷாட்டையும்”, அந்த பதிவோடு அவர் இணைத்திருந்தார்.
அதில் அதிர்ச்சி என்னவென்றால், அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள அவ்வளவு குறுகலான இடத்திற்கு, அதன் உரிமையாளர் நூற்று 70 ரிங்கிட் வாடகை விதித்தது தான்.
அது தனி அறை கூட அல்ல. வீட்டின் வரவேற்பு அறையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என உரிமையாளர் கூறியது தம்மை அதிர்ச்சி அடையட் செய்ததாக, மாட் டான் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவின் கீழ், “நீங்கள் அந்த வீட்டில் வாடகைக்கு தங்குவதற்கு செல்கிறீர்களா? அல்லது பாதுகாவலராக வேலைக்கு செல்கிறீர்களா?” என இணைய பயனர் இருவர் நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ள வேளை ; மிகவும் சுயநலமான உரிமையாளர் என மற்றொருவர் சினத்தை வெளிப்படுத்தியுள்ளார்.