சுங்கைப் பட்டாணி, மே 25- இந்திய சமூகத்தில் வீட்டிற்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டுமென அயராமல் பாடுபட்ட ம.இ.காவின் முன்னாள் தேசிய தலைவர் துன் டாக்டர் S.சாமிவேலு அவர்களின் திருவுருவச் சிலை சுங்கப் பட்டாணி செமிலிங்கில் உருவான ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வாளகத்தில் நேற்றிரவு திறக்கப்பட்டது. 14 அடி உயரத்தில் அமைந்த இந்த சிலையை ம.இ.காவின் தேசிய தலைவரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைககழகத்தின் வேந்தருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் , துன் சாமிவேலு அவர்களின் புதல்வர் செனட்டர் டத்தோஸ்ரீ வேள்பாரி, ம.இ.காவின் தலைவர்கள், ஏய்ம்ஸ்ட் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நாட்டில் இந்தியர்களுக்கான ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சியை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாக அமல்படுத்திய துன் சாமிவேலு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் காணிக்கையாக இந்த சிலை திறப்பு விழா அமைவதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அனைவருக்கும் கல்வி என்பதுதான் துன் சாமிவேலுவின் லட்சியக் கணவாக இருந்தது. அந்த லட்சியத் திட்டத்தில் உருவான ஏம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரான டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
இதனிடையே தமது தந்தை துன் சாமிவேலு அவர்களின் திருவுருவச் சிலையை ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்ட தருணம் தமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு இதற்காக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் உட்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக டத்தோஸ்ரீ வேள்பாரி தெரிவித்தார். இந்த சிலையை பார்க்கும்போது தமது தந்தை ஏய்ம்ட் பல்கலைக்கழகத்தை பார்ப்பதுபோல் உணர்வதாகவும் அவர் கூறினார்.