புத்ராஜெயா, ஆகஸ்ட்-23 – கிள்ளான் பள்ளத்தாக்கு வீடுகளில் மின்சார மீட்டர்களை மாற்றியமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
அக்கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட ஐவர் புதன் கிழமை கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களில் கைதுச் செய்யப்பட்டதாக, மலேசிய ஊழல் தடுப்பாணையம் (MACC) கூறியது.
சோதனை என்ற பெயரில், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று மின் மீட்டர்களை மாற்றி விடுவதும், அப்பழியை வீட்டுக்காரர்கள் மீது போட்டு பணத்தைக் கறப்பதுமே அக்கும்பலின் யுக்தியாகும்.
மின் மீட்டரை மாற்றியது அம்பலமானால் ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்; எனவே, லஞ்சம் கொடுத்தால், அதில் சிக்குவதிலிருந்து காப்பாற்றுகிறோம் எனக் கூறி மக்களை அக்கும்பல் நம்ப வைக்கிறது.
வீடுகளையும் வணிகத் தளங்களையும் குறி வைக்கும் அக்கும்பல், 5,000 ரிங்கிட் முதல் 10,000 ரிங்கிட் வரை லஞ்சமாகக் கேட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஆயிரக்கணமான வாடிக்கையாளர்களை ஏமாற்றி பல ஆயிரக்கணக்கான ரிங்கிட்டை அக்கும்பல் வருமானமாக ஈட்டியுள்ளது.
கைதானவர்களில் மூவர், வீடுகளில் மின்சார இணைப்பைத் துண்டிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள எரிசக்தி விநியோக நிறுவன குத்தகையாளர்கள் என்பதால், பொது மக்களுக்கும் எளிதில் சந்தேகம் வருவதில்லை.
4 ஆடவர்கள் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பெண் MACC-யின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.