
பாசீர் கூடாங், ஏப்ரல்-19 – ஜோகூர், பாசீர் கூடாங்கில் நேற்று அதிகாலை 3 வீடுகளை நாசமாக்கியத் தீ விபத்தில் சிக்கிய இரு பெண்களைத் தீயணைப்பு வீரர்கள் துணிகரமாக மீட்டுள்ளனர்.
தாமான் கோத்தா மாசாயில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து அதிகாலை 3.30 மணிக்கு மேல் அவசர அழைப்பு வந்ததும், உடனடியாகச் சம்பவ இடம் விரைந்த பாசீர் கூடாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 21 வீரர்கள், அங்கு 3 வீடுகள் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டனர்.
மீட்புப் பணியின் போது, தீப்பற்றிய வீட்டிலிருந்து 20 வயது Azian Zainalabidin மற்றும் 25 வயது Murni Atikah Zainalabin ஆகிய இரு பெண்கள் மயக்க நிலையில் இருப்பதை வீரர்கள் கண்டறிந்தனர்.
உயிரைப் பொருட்படுத்தாமல் செயல்பட்ட தீயணைப்புப் படையினர், அவர்களைப் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட இரு பெண்களும் சிகிச்சைக்காகச் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
வீடுகள் மற்றும் வாகனங்கள் 95 விழுக்காடு வரை சேதமடைந்த நிலையில், காலை 6.20 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் ஒரு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதை எண்ணி குடியிருப்பாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



