பெரு, ஜூலை 19 – பெருவின், ஆழமான அமேசான் அடர்ந்த வனப்பகுதியில், வெளியுலக தொடர்பு அறவே இன்றி தனித்தே வாழும் மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடி மக்களின் அரிய வீடியோக்களும், புகைப்படங்களும் வைரலாகியுள்ளன.
கடந்த செவ்வாய்கிழமை சர்வைவல் இன்டர்நேசனல் (Survival International) வெளியிட்ட அந்த பதிவுகளில், ஏராளமான பழங்குடி மக்கள், ஆற்றங்கரையில் ஓய்வெடுப்பதை காண முடிகிறது.
கடந்த ஜூன் மாதம் இறுதியில், பிரேசில் எல்லையிலுள்ள, தென்கிழக்கு பெரு மாநிலமான மாட்ரே டி டியோஸில் (Madre de Dios) அந்த காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
அண்மைய சில காலமாக, மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடிகள் குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் வெட்டு மர நடவடிக்கைகளால்,
மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய நிலங்களில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கலாம் என, உள்நாட்டு பழங்குடி உரிமைக் குழுவான FENAMAD கூறியுள்ளது.
குறிப்பாக, உணவு மற்றும் குடிநீர் தேடி அவர்கள் புறப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வெளியுலக தொடர்பு இன்றி, எந்த முன்னேற்றமும் இல்லாமல், இன்னமும் கற்காலத்தில் வாழ்ந்து வரும் இந்த மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடி மக்களை காண்பது மிகவும் அரிது. அப்படியே பார்த்தாலும், அமேசான் நுழைவாயிலில், அவர்களில் ஒருவர் அல்லது இருவரை மட்டுமே காண முடியும்.
எனினும், ஒரு கூட்டமாக அவர்கள் இருக்கும் காணொளி, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களின் எதிர்காலம் மீதான கேள்விகளையும் எழச் செய்துள்ளது.