
கோலாலம்பூர், ஜூன்-15 – சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் (Wong Chen), பிகேஆர் (PKR) கட்சியின் போராட்டத்தில் இனி நம்பிக்கை இல்லையெனில் அதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சிவமலர் கணபதி தெரிவித்துள்ளார்.
15ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆர் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (Pakatan Harapan) சார்பில் போட்டியிட்டு வோங் சென் வெற்றி பெற்றதாகவும், அந்த வெற்றி கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கூட்டு உழைப்பால் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
அதேவேளையில், பிகேஆருக்கு மாற்றாக உருவாகி வரும் பிற அரசியல் இயக்கங்களுடன் வோங் சென் தொடர்பில் இருப்பது அவரது கட்சி விசுவாசம் குறித்து கேள்விகளை எழுப்புவதாக சிவமலர் தெரிவித்தார்.
இது கருத்துச் சுதந்திரம் தொடர்பான பிரச்சினை அல்ல மாறாக வாக்காளர்கள் வழங்கிய ஆணைக்கும் கட்சியின் போராட்டத்திற்குமான அர்ப்பணிப்பு தொடர்பான விடயம் என அவர் கூறினார்.
மேலும், பிகேஆர் எந்தவொரு தனிநபரின் அழுத்தத்திற்கும் பணியாது என்றும் கட்சியின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலேயே செயல்படும் என்றும் சிவமலர் வலியுறுத்தினார்.



