ஷா அலாம், ஆக 8 – ஷா அலாம் செக்சன் 20-இல் உணவகத்திற்கு அருகேயுள்ள ஒரு கால்வாயில் 28 குட்டிகளுடன் இருந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது. நேற்றிரவு மணி 9.56 அளவில் அந்த பாம்புகள் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் உதவி இயக்குனர் அகமட் முக்லிஸ் ( Ahmad Mukhlis ) தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஷா அலாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அறுவர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்புகள் காணப்பட்ட இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அப்போதுதான் அந்த மலைப்பாம்பையும் அது ஈன்றெடுத்த குட்டிகளையும் அங்குள்ள நீரோட்ட கால்வாயில் கண்டனர். 12 நிமிடத்திற்குள் 2 மீட்டர் கொண்ட மலைப்பாம்பையும் அரை மீட்டர் உள்ள அதன் குட்டிகளையும் பிடித்த தீயணைப்பு வீரர்கள் அவற்றை பாதுகாப்பான இடத்தில் விட்டதாக அகமட் முக்லிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.