ஸ்ரீ அலாம், நவ 28 – முகநூல் மூலம் கண்டுப்பிடித்த போலி முதலீட்டுத் திட்டத்தால் இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர் 504,000 ரிங்கிட் இழந்தார். பணத்தை பறிகொடுத்த 44 வயதான பெண் , தனது லாபத்தைத் திரும்பப் பெற முயன்றபோது, அவரது முதலீட்டுக் கணக்கு முடக்கப்பட்டதால் திங்களன்று புகார் செய்ததாக ஸ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சோஹைமி இஷாக் ( Mohd Sohaimi Ishak ) தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் முகநூல் விளம்பரம் சம்பந்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில் அந்த பெண் ஈடுபட்டுள்ளார். அவர் தனது தொடக்க முதலீட்டில் இருந்து அக்டோபர் மாதம் 400 ரிங்கிட் பெற்தைத் தொடர்ந்து இத்திட்டத்தை நம்பி மேலும் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
அக்டோபர் 17 ஆம் தேதி மற்றும் நவம்பர் 21ஆம் தேதிக்கிடையே 10 பரிவர்த்தனைகளில் 504,000 ரிங்கிட்டை நான்கு வங்கிக் கணக்குகளுக்கு அந்த பெண் பட்டுவாடா செய்துள்ளார். ஒரு மாதம் கழித்து தனது லாபத்தை திரும்பப் பெற முயன்றபோது, வருமானத்தை மீட்பதாக இருந்தால் மேலும் பணத்தை முதலீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதால் தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து அப்பெண் போலீசில் புகார் செய்தார். மோசடி குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முகமட் சோஹாய்மி கூறினார்.