கோலாலம்பூர், ஜூலை-13 – கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் பெரும் பணமிருந்தும் சமூகத்துக்கு ஒன்றும் செய்வதில்லை எனக் கூறப்படுவதை அதன் தலைவர் தான் ஸ்ரீ ஆர்.நடராஜா மறுத்துள்ளார்.
தேவஸ்தானத்தின் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவோர் முதலில் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நீதிமன்ற ஆணையின் கீழ் செயல்படும் ஒரு ஸ்தாபனமாகும்.
அதாவது ஆலய வழிபாடுகள், பூஜைகள், திருப்பணிகள் போன்ற தெய்வக் காரியங்களுக்கு மட்டுமே தேவஸ்தானத்தின் நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்ற ஆணைத் தெரிவிக்கிறது.
அதன்படியே தேவஸ்தானமும் செயல்பட்டு வருகிறது; இருந்தாலும் சமூகக் கடப்பாட்டிலிருந்து நாங்கள் ஒரு போதும் விலகியதில்லை.
ஆண்டுதோறும் சமூக உதவிகளுக்காகவே 1 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கி வருகிறோம்.
இவ்வாண்டு இதுவரையில் மட்டுமே 84,691 ரிங்கிட்டை சமூக உதவிகளுக்கு வழங்கியுள்ளோம்.
உயர் கல்விக் கூட மாணவர்கள், சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சைத் தேவைப்படுவோர் உள்ளிட்டோருக்கு அவ்வுதவிகள் வழங்கப்பட்டன.
ஆனால் குறைக் கூறுவோரின் கண்களுக்கு அது தெரிவதில்லை என தான் ஸ்ரீ நடராஜா சொன்னார்.
இன்னொன்று அவர்கள் நினைப்பது போல் பணம் கோடிக்கணக்கில் கொட்டவில்லை; நாங்களும் சில சமயம் நன்கொடைகளைப் பெற்றுத் தான் ஆலயப் பணிகளை செய்து வருகிறோம்.
குறைக் கூறுபவர்கள் குறைக் கூறட்டும்; தேவஸ்தானம் தனது வழியில் சமூகத்துக்கானதை தொடர்ந்து செய்து வருமென வெள்ளிக்கிழமை நடைபெற்ற உதவி வழங்கும் நிகழ்வுக்குப் பிறகு பேசிய போது நடராஜா கூறினார்.