கோலாலம்பூர், ஏப்ரல் 5 – ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, போக்குவரத்து சீராக இருப்பதை உறுதிச் செய்யவும், வீடு புகுந்து கொள்ளையிடும் நடவடிக்கைகளை தவிர்க்கவும், அரச மலேசிய போலீஸ் படை 22-வது ஒப்ஸ் செலாமாட் கண்காணிப்பு – சோதனை நடவடிக்கையை முடுக்கி விட உள்ளது.
இம்மாதம் எட்டாம் தேதி திங்கட்கிழமை தொடங்கி 13-ஆம் தேதி வரை, ஏழு நாட்களுக்கு அந்த கண்காணிப்பு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென, தேசியப் போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.
“பாதுகாப்பான வீடு, பாதுகாப்பாக இலக்கை சென்றடைவோம்” எனும் கருப்பொருளில் இம்முறை அந்த கண்காணிப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதனால், சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொதுமக்கள், திட்டமிட்டு தங்கள் பயணத்தை மேற்கொள்வதோடு, சாலையில் வாகனத்தை ஓட்டும் போது பொறுமையுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளுமாறு, தமது முகநூல் பதிவு வாயிலாக ரஸாருடின் நினைவுறுத்தினார்.