ஹாங்காங், ஏப்ரல் 6 – ஹாங்காங்கில் குரங்குகள் தாக்கிய ஆடவரின் உடலில் அரிய வகைக் கிருமி கண்டறியப்பட்டதை அடுத்து, குரங்குகளுக்கு அருகில் செல்லவோ, அவற்றைத் தொடவோ, உணவிடவோ வேண்டாம் என அங்குள்ள மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Heepes simia virus அல்லது B வைரஸ் என்றழைக்கப்படும் அக்கிருமி மனிதருக்குத் தொற்றியிருப்பது ஹாங்காங்கில் இதுவே முதன் முறையெனக் கூறப்படுகிறது.
எனினும் இந்த B வைரஸ் மனிதரிடம் இருந்து மனிதருக்குப் பரவுவது மிக மிக அரிது என, சுகாதார பாதுகாப்பு மையம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட நபரான 37 வயது ஆடவர், பிப்ரவரியில்
Kam Shan விலங்கியல் பூங்காவுக்குச் சென்ற போது, அங்கிருந்த குரங்குகளால் தாக்கப்பட்டார்.
பிறகு மார்ச் மாதம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
ஆய்வுக்கூட பரிசோதனையில் அவருக்கு அரிய வகை B வைரஸ் தொற்றியிருப்பது ஏப்ரல் மூன்றாம் தேதி உறுதிச் செய்யப்பட்டது.
B வைரஸ் வழக்கமாக ஹாங்காங் காடுகளில் அதிகம் காணப்படும் Maqaues வகை குரங்குகளின் எச்சில், சிறுநீர் மற்றும் மலக்கழிவுகளில் காணப்படும்.
அக்குரங்குகள் நம்மை கடிக்கும் போதோ, கீறும் போதோ அந்த B வைரஸ் பரவுகிறது என அம்மையம் கூறியது.
கிருமித் தொற்றியவருக்கு தொடக்கத்தில் சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறி தெரியும்.
பின்னர் உடலின் மத்திய நரம்பு அமைப்பையே அது உருக்குலைத்து விடும் என அம்மையம் மேலும் கூறிற்று.