புத்ராஜெயா, ஆகஸ்ட்-6, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டது தொடர்பில் தாம் வெளியிட்ட அனுதாபச் செய்தியை நீக்கியதற்காக, Meta கோரிய மன்னிப்பை ஏற்றுக் கொள்வதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.
ஆனால், இனியும் இது போன்று செய்யாதீர்கள் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த சமூக ஊடக ஜாம்பவான் நிறுவனத்தை நினைவுறுத்தினார்.
அது குறித்த செய்தியை மத்தியக் கிழக்கில் உள்ள எனது சகாக்கள் படித்து விட்டனர்; உலகெங்கும் அது பரவியும் விட்டது; எனவே அது மீண்டும் நிகழாதிருப்பதை Meta உறுதிச் செய்ய வேண்டுமென பிரதமர் கூறியதாக, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) சொன்னார்.
பிரதமரின் அனுதாபச் செய்தியை நீக்கியதற்காக பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென, Meta பிரதிநிதிகளுடனான நேற்றையச் சந்திப்பில், பிரதமர் துறை அலுவலகம் (PMO) வலியுறுத்தியது.
அதோடு, அது குறித்து முழு விளக்கமளிக்க வேண்டுமென்றும் Meta கேட்டுக் கொள்ளப்பட்டது.
எந்தவொரு பாகுபாடுமின்றி, மற்ற உலகத் தலைவர்களுக்கு ஈடாக மலேசியப் பிரதமரையும் நடத்த வேண்டுமென அதன் போது வலியுறுத்தப்பட்டதாக ஃபாஹ்மி கூறினார்.
பாலஸ்தீன முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹானியே கடந்த வார மத்தியில் ஈரானுக்குச் சென்றிருந்த போது படுகொலைச் செய்யப்பட்டார்.