
கோலாலம்பூர், ஏப்ரல்-7, ஹோங் கோங்கிலிருந்து கோலாலம்பூர் வரும் வழியில் தனது AK139 விமானம் நேற்று தொழில்நுட்ப கோளாறுக்கு ஆளானதை, ஏர் ஏசியா உறுதிப்படுத்தியுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக கேபினிள் ஏற்பட்ட அழுத்தமே அதற்குக் காரணமென, அந்த மலிவுக் கட்டண விமான நிறுவனம் கூறியது.
எனினும், பயணிகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் சுவாசக் கவசங்களை வழங்கியது உட்பட விமானப் பணியாளர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கினர்.
எந்தவொரு சூழ்நிலையிலும் பயணிகளின் பாதுகாப்பு சமரசம் செய்துக்கொள்ளப்படவில்லை.
விமானம் பாதுகாப்பாக மாலை 4.05 மணிக்கு KLIA 2-ல் தரையிறங்கியது.
விரிவான பொறியியல் மதிப்பீடுகளுக்குப் பிறகு, தொழில்நுட்பக் கோளாறு அடையாளம் காணப்பட்டு சரிசெய்யப்பட்டது.
அனைத்து பாதுகாப்பு தரக் கட்டுப்பாடுகளும் முழுமையாகப் பின்பற்றப்பட்டு, சேவையில் ஈடுபட பாதுகாப்பானது தான் என இன்று அவ்விமானத்திற்கு தரச் சான்றிதழ் தரப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவம் நெடுகிலும் விமானப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியப் பயணிகளுக்கு ஏர் ஏசியா இவ்வேளையில் நன்றித் தெரிவித்துக் கொண்டது.
ஏர் ஏசியா விமானம் நடுவானில் பிரச்னையை சந்திப்பது ஒரு வாரத்தில் இது இரண்டாவது சம்பவமாகும்.
மார்ச் 27-ஆம் தேதி சீனாவின் ஷென் சென் பயணமான AK128 விமானம், நடுவானில் வலது இயந்திரத்தில் தீப்பற்றியதால் KLIA-வில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அனைத்து 171 பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தீ அணைக்கப்பட்டது.