1 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்களை வரவேற்கத் தயாராகும் பினாங்கு தைப்பூசம்; முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தண்ணீர் மலை கோவிலுக்கு சிறப்பு போக்குவரத்து

ஜோர்ஜ்டவுன், ஜனவரி-5,
வரவிருக்கும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பினாங்கு மாநிலம் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்களை வரவேற்கத் தயாராகி வருகிறது.
சென்னை–பினாங்கு நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், இந்தியாவிலிருந்து கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் போலீஸாருடன் இணைந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திட்டங்களை வகுத்துள்ளதாக, வாரியத்தின் துணைத் தலைவரும் செனட்டருமான Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கூறினார்.
கடந்தாண்டு கூட்டம் ஒரு மில்லியனை எட்டியது; இவ்வாண்டு சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
இவ்வேளையில், அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில் தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலை உச்சிக்கு செல்ல சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது.
60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதுகாப்பாக கோவிலில் சென்று வழிபாடு செய்தனர்.
அவர்களுக்காக சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டது.
இம்முயற்சி தொடருமென உறுதியளித்த லிங்கேஷ்வரன், முன்பதிவு செய்தால் எப்போதும் உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மலை உச்சி முருகனை தரிசிப்பதில் அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் கனவை நிறைவேற்றும் அறப்பணி வாரியத்தின் அர்ப்பணிப்பை இம்முயற்சி வெளிப்படுத்துகிறது.



