ராந்தாவ் பாஞ்சாங், ஜூலை-31 – கிளந்தான், ரந்தாவ் பாஞ்சாங்கில் 10 மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் விழுந்த 58 வயது மாதுவை, தீயணைப்பு மீட்புத் துறைக் காப்பாற்றியுள்ளது.
கம்போங் ஃபெல்க்ரா புக்கிட் தண்டாக் (Kampung Felcra Bukit Tandak) எனுமிடத்தில் இன்று அதிகாலை 5.29 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தீயணைப்பு மீட்புத் துறை வந்து பார்த்த போது, தண்ணீரில் விழுந்து விடாமலிருக்க அம்மாது கான்கிரீட் சுருளில் (concrete coil) இரு கால்களையும் முட்டுக் கொடுத்தபடி கிடந்தார்.
ஒருவழியாகக் கையிற்கைக் கொண்டு அம்மாதுவை தீயணைப்பு வீரர்கள் மேலே கொண்டு வந்தனர்.
உடல் நடுக்கத்துடன் காணப்பட்ட அம்மாது, தான் எப்படி கிணற்றுக்குள் விழுந்தேன் என்றே தெரியவில்லை என்றார்.
தண்ணீரை நெருங்கிய போது தான், கிணற்றினுள் விழுந்திருப்பதை உணர்ந்து மகனை அவர் உதவிக்குக் கூப்பிட்டது தெரிய வந்தது.
தனது தாய் மனச்சோர்வில் இருந்தவர் என்றும், அவரின் நடமாட்டம் எப்போதும் தங்களின் கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் மகன் தெரிவித்தார்.
இவ்வேளையில், மனச்சோர்வு அல்லது மன அழுத்ததால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை முடிந்த வரை தனியாக விடாமல், அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்குமாறு போலீஸ் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.