
பெய்ஜிங், அக்டோபர்-17,Coke, Sprite போன்ற குளிர்பானங்களை விரும்பி அருந்துவதுடன், கடல் உணவுகளையும் சுவைத்து வரும் சீனாவைச் சேர்ந்த 101 வயது முதியவர், தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளார்.
கிழக்குச் சீனாவைச் சேர்ந்த Lu Shizeng என்ற அந்த கொள்ளுத் தாத்தா, வயது முதிர்ந்த நிலையிலும் சுறுசுறுப்பாக வாழ்ந்து வருகிறார்.
5 நாட்களுக்கு ஒருமுறை சந்தைக்குச் சென்று மீன், இறால், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகளையும் காய்கறிகளையும் வாங்குவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
குறிப்பாக, குளிர்ந்த Sprite பானத்தில் சிறிதளவு wine கலந்து அருந்துவது அவருக்கு மிகவும் பிடித்தமான பழக்கமாம்.
தினமும் மாலை 5 மணிக்குள் இரவு உணவை முடித்துவிட்டு, 7 மணிக்குத் தூங்கச் செல்லும் இவர், அதிகாலை 4 மணிக்கெல்லாம் விழித்துக் கொள்கிறார்.
பகல் நேரத்தில் சிறிது நேரம் தூங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தனக்கு அரிதாகவே சளி பிடிப்பதாகவும், இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆச்சரியத்தில் மூழ்கிய இணையவாசிகள், மகிழ்ச்சியான மனநிலையும் முறையான தூக்கமும் தாத்தாவின் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக இருக்கலாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், சீனி நிறைந்த குளிர்பானங்களை அருந்துவது நீண்ட ஆயுளுக்கு உதவும் என்பதற்கு இந்தத் தனிப்பட்ட சம்பவம் மருத்துவ ஆதாரமாகாது என்பதையும் பலர் சுட்டிக் காட்டினர்.



