
கோலாலம்பூர், அக்டோபர்-20, 7,000 ரிங்கிட் தனிநபர் வருமானம் கொண்டோர் அல்லது 12,000 ரிங்கிட் குடும்ப வருமானம் கொண்டோர்
இலக்கிடப்பட்ட அரசாங்க உதவித் தொகையைப் பெறுவதிலிருந்து விடுபடுவர் என்ற ஆருடத்தை, சம்பந்தப்பட்ட தரப்புகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் (Datuk Seri Amir Hamzah Azizan) அவ்வாறு நினைவுறுத்தியுள்ளார்.
கல்வி, பெட்ரோல், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கான மானியங்களைப் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிப்பது தொடர்பில், அரசாங்கம் இன்னமும் தரவுகளை ஆராய்ந்து வருகிறது.
அது குறித்த அறிவிப்பு அடுத்தாண்டில் தான் வெளியிடப்படும்.
அதற்குள் சொந்தமாக வியாக்யானம் செய்துகொண்டு யாரும் மக்களைக் குழப்ப வேண்டாமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
எது எப்படி இருந்தாலும் உண்மையிலேயே தகுதிப் பெற்ற மக்களுக்கே அரசாங்க மானியங்கள் கிடைப்பது உறுதிச் செய்யப்படுமென்றார் அவர்.
2025 வரவு செலவு அறிக்கையில் சமூக நல உதவிகளுக்கான வருமான வரம்பை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் குறைக் கூறியிருந்தார்.
புள்ளிவிவரத் துறையின் தரவுகளை மேற்கோள் காட்டிய சைட் சாடிக், உயர் வருமானம் பெறும் T15 குடும்பங்களுக்கான மானியங்களை நிறுத்தினால், உண்மையில் நடுத்தர வருமானம் பெறும் வர்கத்தினரும் பாதிக்கப்படுவர் என கவலைத் தெரிவித்தார்.
அதாவது, 12,000 ரிங்கிட் குடும்ப வருமானம் பெறுவோர் அல்லது 7,000 ரிங்கிட் தனிநபர் வருமானம் ஈட்டுவோருக்கு அரசாங்க உதவித் தொகைக் கிடைக்காமல் போகலாம் என்றார் அவர்.
அரசாங்க உதவிகளுக்கு குடும்ப வருமானமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அப்படி பார்த்தால், தலா 7,000 ரிங்கிட் மாத வருமானத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருவர் வேலை செய்தாலும், குடும்ப வருமானம் என வரும்போது அது T15 குழுவில் சேர்ந்து விடுவதை சைட் சாடிக் சுட்டிக் காட்டினார்.
இலக்கிடப்பட்ட பெட்ரோல் உதவித் தொகை அடுத்தாண்டு மத்தியில் நடைமுறைக்கு வருமென்றும், ஆனால் நாட்டு மக்களில் 85 விழுக்காட்டினர் அதில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பட்ஜெட் தாக்கலின் போது பிரதமர் உத்தரவாதம் அளித்திருந்தார்.