புத்ரா ஜெயா, ஏப்ரல் 9 – இணையத்தில், 13 வயதுக்குக் கீழ்பட்ட சிறார்களின் பாதுகாப்பு விவகாரத்தைக் கையாளும் கடப்பாட்டை Meta, Tik Tok ஆகிய நிறுவனங்கள் மறுஉறுதிச் செய்துள்ளன.
தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சிலுடன் சைபர் ஜெயாவில் நடந்த சந்திப்பின் போது அவ்விரு ஊடக ஜாம்பவான் நிறுவனங்களும் அந்த உத்தரவாதத்தை வழங்கின.
அவ்வகையில், 13 வயதுக்குக் கீழ்பட்ட சிறார்களுக்கு இணையம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிச் செய்ய, குற்றவியல் அம்சங்களைக் கொண்ட இணைய மோசடி, சூதாட்டம், பொய்ச் செய்தி, 3R விவகாரங்களை உட்படுத்திய உள்ளடக்கங்களை Meta-வும் Tik Tok-கும் தீவிரமாகக் கண்காணிக்கவிருக்கின்றன.
அந்த முக்கியச் சந்திப்பில் போலீஸ், தகவல்-பல்லூடக ஆணையம் MCMC பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இதனிடையே மலேசியாவில் சமூக ஊடகச் செயல்பாடு மீதான சட்டத் திட்டங்கள் மற்றும் வழிகாட்டி கோட்பாடுகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி குறித்தும் அச்சந்திப்பில் அந்நிறுவனங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் ஃபாஹ்மி தெரிவித்தார்.
நாட்டு மக்களின் பேச்சுரிமைக்கு மதிப்புக் கொடுக்கும் அதே வேளை, இணையப் பயன்பாடு அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிச் செய்யும் மடானி அரசாங்கத்தின் கடப்பாடு அதுவென ஃபாஹ்மி கூறினார்.