கோலாலம்பூர், ஏப்ரல் 22 – 13 வயதுக்குக் கீழ்பட்ட பிள்ளைகள் எந்தவொரு சமூக ஊடகக் கணக்கையும் கொண்டிருக்காததைப் பெற்றோர்கள் உறுதிச் செய்ய வேண்டும் என நினைவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் பயன்பாடு அவர்களுக்குச் சற்றும் உகந்தது அல்ல என தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் MCMC கருதுவதாக, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
பெரும்பாலான சமூக ஊடகங்களும் அவ்வயதினர் கணக்கு வைத்திருக்க அனுமதிப்பதில்லை.
எனவே, TikTok, Facebook, Instagram என எதுவாகினும், 13 வயதுக்குக் கீழ்பட்டப் பிள்ளைகள் அதில் கணக்கு வைத்திருக்கக் கூடாது; அவர்களுக்காகப் பெற்றோர்களும் கணக்கைத் திறந்து உதவக் கூடாது என ஃபாஹ்மி எச்சரித்தார்.
ஒருவேளை பிள்ளைகள் சமூக ஊடகக் கணக்கைக் கொண்டிருந்தால் அது குறித்து MCMC-யிடம் பெற்றோர்கள் புகாரளிக்க வேண்டும்.
அடுத்த நிமிடம் சம்பந்தப்பட்ட கணக்குகள் முடக்கப்படும் என ஃபாஹ்மி சொன்னார்.
சிறார்களுக்கான இணையப் பாதுகாப்புத் தொடர்பில் அனைத்து சமூக ஊடகப் பிரதிநிதிகளுடனும் அமைச்சும் MCMC-யும் அண்மையில் கலந்தாய்வு நடத்தின.
அதன் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பான முடிவுகள் மே மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம் என்றும் ஃபாஹ்மி கோடி காட்டினார்.