கோலாலம்பூர், செப்டம்பர்-6, 14 வயதுக்குக் கீழ்பட்ட சிறார்கள் மத்தியில் சமூக ஊடகப் பயன்பாடு தடைச் செய்யப்பட வேண்டுமென, பத்தில் ஏழு மலேசியர்கள் விரும்புகின்றனர்.
பிரபல உலகச் சந்தை ஆய்வு நிறுவனமான Ipsos மேற்கொண்ட ஆய்வில், இந்தோனீசியாவுக்கு அடுத்து மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆய்வில் பங்கேற்ற மலேசியர்களில் 71 விழுக்காட்டினர், பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் மேற்கண்ட வயதினருக்கு சமூக ஊடகங்கள் தடைச் செய்யப்பட வேண்டுமெனக் கூறியுள்ளனர்.
அதுவே இந்தோனீசியாவில் 79 விழுக்காட்டினர் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மற்றொரு கேள்விக்கு, 51 விழுக்காட்டு மலேசியர்கள் 14 வயதுக்குக் கீழ்பட்ட சிறார்களுக்கு விவேகக் கைப்பேசி பயன்பாடே தடைச் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
29 விழுக்காட்டினர், ChatGPT பயன்பாடு தடைச் செய்யப்பட வேண்டுமாம்.
பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்ற கேள்விக்கு, 56 விழுக்காட்டு மலேசியர்கள் அது பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டானது என்றும், 39 விழுக்காட்டினர் பெற்றோரின் கடமையென்றும் கூறியுள்ளனர்.
தொழில்நுட்பத்துக்கு மலேசியப் பள்ளி பாடத்திட்டம் மிகக் குறைவான முக்கியத்துவத்தையே கொடுப்பதாக 42 விழுக்காட்டு மலேசியர்கள் தெரிவித்தனர்.
கல்வியில் தொழில்நுட்பம் என்ற அந்த கருத்துக் கணிப்பு, இணையம் வாயிலாக 30 நாடுகளில் 75 வயதுக்குக் கீழ்பட்ட 23,754 பேரிடம் ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டது.