குவா மூசாங், ஆகஸ்ட்-16 – 2013-ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கப்பெற்ற குடியுரிமை விண்ணப்பங்களில் இதுவரை சுமார் 14,000 விண்ணப்பங்களை உள்துறை அமைச்சு (KDN) அங்கீகரித்துள்ளது.
அவற்றில் 75 விழுக்காட்டு அங்கீகாரங்கள், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 15A பிரிவின் கீழ் சிறப்பு சூழ்நிலைகளின் கீழ்வரும் 3 வகை விண்ணப்பங்களை உட்படுத்தியதாக அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Saifuddin Nasution Ismail) தெரிவித்தார்.
முறை தவறி பிறந்த குழந்தைகள், பராமரிப்பிலுள்ள குழந்தைகள், தத்துப்பிள்ளைகள் ஆகியவையே அந்த 3 வகை விண்ணப்பப் பிரிவுகளாகும்.
அதைத் தவிர்த்து, உள்நாட்டவரை மணந்த வெளிநாட்டுப் பெண்கள் மற்றும் உள்நாட்டு பெண்ணுக்கும் வெளிநாட்டு கணவனுக்கும் வெளிநாட்டில் பிறந்த 21 வயதுக்குக் கீழ்பட்ட குழந்தைகளுக்கு குடியுரிமைக் கோரி வந்த விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் குவிந்துக் கிடக்கின்றன.
இதுநாள் வரை அவை சரியாக கண்டுகொள்ளப்படாததால், கோப்புகள் ‘நகராமல்’ அப்படியே கிடந்தன.
ஆனால் மடானி அரசாங்கத்தின் கீழ் அனுதாபத்தோடும் பரிவோடும் அக்கறையோடும் அவ்விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக டத்தோ ஸ்ரீ சைஃபுடின் கூறினார்.