புத்ராஜெயா, மே 3 – ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரையில் அல்லது இவ்வாண்டின் 17-வது வாரத்தில், நாட்டில் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஈராயிரத்து 237 பேராக பதிவாகியுள்ளது.
அந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய வாரம் பதிவுச் செய்யப்பட்ட ஈராயிரத்து 321 சம்பவங்களை காட்டிலும் குறைவாகும்.
அதே சமயம், அக்காலகட்டத்தில், டெங்கி காய்ச்சலால் மரணம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை என்பதையும், சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் முஹம்ட் ராட்ஸி அபு ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதனை தொடந்து, இவ்வாண்டின் 17-வது வாரம் வரையில், நாட்டில் மொத்தம் 52 ஆயிரத்து 887 டெங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கை கடந்தாண்டு அதே காலக்கட்டத்தில் பதிவுச் செய்யப்பட்ட 36 ஆயிரத்து 977 சம்பவங்களை காட்டிலும் அதிகமாகும்.
அதே காலகட்டத்தில், டெங்கி பாதிப்புகள் தொடர்பில் மொத்தம் 39 மரணங்களும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக, 51 இடங்களும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா கூட்டரசு பிரதேசங்களில் தலா நான்கு இடங்களும், பினாங்கில் மூன்று இடங்களும், பேராக் மற்றும் கெடாவில் தலா இரண்டு இடங்களும், சரவாக்கில் ஓர் இடமும், டெங்கி காய்ச்சல் பரவும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனினும், 17-வது வாரத்தில், புதிய சிக்குன்குனியா பாதிப்பு எதுவும் அடையாளம் காணப்படாத நிலையில், இவ்வாண்டு இதுவரை மொத்தம் 23 சிக்குன்குனியா சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.