Latestமலேசியா

170 கி.மீ. ‘நன்றிப் பயணம்’ நிறைவு: சைட் சாடிக் ஓட்டம் மூலம் RM360,000-க்கும் அதிகமான நிதி திரட்டல்

மூவார், ஜூலை-19-ஜோகூர், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், புத்ராஜெயாவிலிருந்து மூவார் வரையில் 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொண்ட ‘நன்றி ஓட்டம்’ (Larian Kesyukuran) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

ஜூலை 16-ம் தேதி தொடங்கிய இந்த 4-நாள் பயணத்தை அவர் இன்று காலை மூவார் மஹாராணி சதுக்கத்தில் (Laman Maharani) முடித்துவைத்தார்.

நிதி முறைகேடு தொடர்பில் அண்மையில் நீதிமன்றத்தில் தமக்கு சார்பாக வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, நன்றிக் கடனாக இந்த ஓட்டத்தை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஓட்டத்தின் மூலம், தனது மூவார் தொகுதி மக்களுக்காக உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் கல்வித் தேவைக்கான iPad கருவிகளை வாங்குவதற்கு அவர் நிதி திரட்டினார்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், 200,000 ரிங்கிட் என்ற இலக்கை நிர்ணயித்த நிலையில், 361,848 ரிங்கிட் என்ற மிகப்பெரிய தொகையை அவர் வெற்றிகரமாகத் திரட்டியுள்ளார்.

சுங்கை ரம்பாய் சந்திப்பிலிருந்து கடைசி 17 கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடந்து வந்தபோது, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலங்கள் வழியாகச் சென்ற இந்தப் பயணத்தின்போது, ஏராளமான பொது மக்களும் அவருடன் இணைந்து ஓடித் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்த நிதி உதவி, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைட் சாடிக்கின் இந்த விடாமுயற்சிக்கு சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!